சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று(மார்ச்.14) தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 404 பேர் இன்று தேர்வு எழுதியுள்ளனர். 12,660 மாணவர்கள் தேர்விற்கு வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடத்தில் மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்படவில்லை.
மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை கண்காணிக்க கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் வருகைப் பதிவேடுகள் பெறப்படுகின்றன. மாணவர்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள ஏதுவாக திருப்புதல் தேர்வுகள் போன்றவை நடத்தப்பட்டன. ஆனாலும், வழக்கம்போல் நடப்பாண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத வரவில்லை. மாணவர்கள் ஏன் தேர்விற்கு வரவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தேர்வுக்கு வராத 11ஆம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 12ஆம் வகுப்பில் படிக்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 8 லட்சத்து ஆயிரத்து 744 மாணவர்கள் மட்டுமே நேற்று மொழி பாடத்தேர்வை எழுதினர். 50,674 பேர் முதல் நாளிலேயே தேர்வுக்கு வரவில்லை. மாணவர்கள் முதல் தேர்வையே புறக்கணித்தது பேசுபொருளானது. இந்த நிலையில், 11ஆம் வகுப்பிலும் முதல் நாளிலேயே 12,660 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.