சென்னை:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 3000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. தற்போது காலி பணியிடங்களின் எண்ணிக்கை 4000ஆக அதிகரித்துள்ளது. பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
இதனால் மாணவர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அதிகப்பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கிடையே காலாண்டுத் தேர்வு அட்டவணை ஓரிரு தினங்களில் வெளியாக உள்ளது.
ஆசிரியர்கள் இல்லாமல் மூன்று மாதங்களைக் கடந்த மாணவர்கள், காலாண்டுத் தேர்வை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் ஏற்கெனவே இருக்கின்றனர் .