சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு குறுகிய நாள்களே உள்ள நிலையில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும்வகையில் தேர்தல் பறக்கும் படையுடன் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி நேற்று (பிப்ரவரி 15) ஆலோசனை மேற்கொண்டார்.
ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வாக்களிக்கும் தேதிக்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கூடுதல் பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் பணிகள் நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னையில் 45 பறக்கும்படைகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பறக்கும்படை குழுவில் உதவி செயற்பொறியாளர், இரு காவலர்கள், ஒளிப்பதிவாளர் உள்பட நான்கு பேர் என மண்டலம் ஒன்றிற்கு மூன்று குழு தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றன.
கூடுதலாக ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் என 15 மண்டலத்திற்கும் 45 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் குழு 17ஆம் தேதி காலை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்.
பணப்பட்டுவாடா மற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, இலவசப் புகார் எண் - 1800 4257 012 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்கலாம். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இதுவரை 55 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐந்தாயிரத்து 794 வாக்குப்பதிவு மையங்களில் கேமரா பொருத்தும் பணி நாளைமுதல் நடைபெறும்.