சென்னை:பள்ளிக் கல்வித் துறையில் உள்ள குரூப் 1சி பிரிவில் மாவட்ட கல்வி அலுவலர் பணியில் 11 இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களைப் பெற்றது. இளநிலைப் பட்டம் மற்றும் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த பணிக்காக 7 ஆயிரத்து 370 ஆண்களும் 9 ஆயிரத்து 801 பெண்களும் என 17 ஆயிரத்து 171 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான கம்ப்யூட்டர் மூலமாக முதல் நிலை தேர்வு நாளை ( ஏப்.20 ) காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை 32 மையங்களில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் நான்கு இடங்களில் இவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
கம்ப்யூட்டர் பொருத்தப்பட்ட 97 அறைகளில் தேர்வு நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தில் 4 மையங்களில் 2 ஆயிரத்து 637 பேர் தேர்வினை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் போட்டித் தேர்வினை எழுதுவதற்கு அதிகளவில் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.