சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கரோனா தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி ஏற்கனவே 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கி 30 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு நேற்று (மே.5) தொடங்கிய நிலையில் இன்று (மே.6) பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது.
4 ஆயிரம் தேர்வு மையங்கள்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவர்களும், தனித்தேர்வர்களாக 30 ஆயிரத்து 765 மாணவர்களும் என 9 லட்சத்து 67 ஆயிரத்து 102 மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுதுவதற்குப் பதிவு செய்துள்ளனர். இதில், பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு 3 ஆயிரத்து 936 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 147 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகரில் உள்ள 552 பள்ளிகளிலிருந்து 217 தேர்வு மையங்களில் மொத்தம் 46,932 மாணவர்களில் 23,979 மாணவிகளும், 22,952 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்வெழுதவுள்ளனர். வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளிலுள்ள தேர்வு மையத்தில் 226 சிறைவாசிகள் தேர்வெழுதவுள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகை: மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 7,470 மாற்றுத் திறனாளி டீஸ்லெக்சியா பாதிப்புள்ள மாணவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம் ஆகியவை அரசுத் தேர்வுத் துறையால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்காகச் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை, தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் படித்து அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளைச் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.