தமிழ்நாட்டில் கரோனாவின் தீவிரம் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டது போல், கல்வித் துறையும் கடுமையான சோதனைக்கு உள்ளானது. கற்றல் கற்பித்தல் பணிகள் பாதித்ததோடு, தேர்வுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் 99 விழுக்காடு முடிந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு மட்டும் நடத்த முடியாமல்போனது. மார்ச் 2ஆம் தேதிமுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்வு, பின்னர் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என இரண்டாவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மூன்றாவதாக ஜூன் 1ஆம் தேதிமுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, நான்காவது முறையாக ஜூன் 15ஆம் தேதிமுதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நான்கு முறை அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிரச்னை பல முனைகளிலும் சூறாவளியாக மாறியுள்ளது.
கரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், பாதிப்பு மிகக் குறைவாக உள்ள அண்டை மாநிலமான தெலங்கானாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டதால், அதே போன்றும் தமிழ்நாட்டிலும் தேர்வை ரத்துசெய்ய அரசுக்கு அழுத்தம் வந்துகொண்டிருக்கிறது.
திட்டமிட்டபடி தேர்வை நடத்த வேண்டும் என்ற உறுதியுடன் தமிழ்நாடு அரசு இருந்தபோதும், மாணவர்களின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் யார் பொறுப்பேற்பது? உள்ளிட்ட பல கேள்விகளை தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது. நீதிமன்றத்தின் இவ்வளவு பெரிய கேள்விக்குப் பிறகும் தேர்வை நடத்தி மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு, அதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நிலைமை விபரீதமாக முடிவதோடு மட்டுமின்றி, அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் என்பதைத் தமிழ்நாடு அரசு தற்போது புரிந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக தாமாகவே தேர்வு ரத்து என்ற முடிவை அறிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு ஆலோசித்துவருகிறது. ஆனால் நீதிமன்றத்தில் இது குறித்து பதிலளிக்க அரசு கால அவகாசம் கேட்டுள்ளது.