தமிழ்நாட்டில் 2020-21ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என மட்டுமே குறிப்பிட்டு வழங்கப்பட உள்ளது. இதனால் வேலை வாய்ப்பிற்கு மாணவர்கள் செல்லும்போது பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழில் தேர்ச்சி என மட்டும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்றின் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு குறைவான நாட்களே பள்ளிக்கு வருகைப் புரிந்தனர். வகுப்புகள் மிகவும் குறைவாகவும், பாடங்கள் முழுவதுமாக நடத்தப்படாமல், தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை.
கடந்த ஆட்சியில் அரசியல் முடிவாக 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முறையான தேர்வுகள் நடத்தப்படாததால், இந்த அரசு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்கான எந்த தரவும் அரசிடம் இல்லை. 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் வழங்கினால் பல்வேறு விமர்சனங்கள் ஏற்படும்.
எனவே அரசின் வேலை வாய்ப்புகள், உயர்கல்வி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த சான்றிதழ் தகுதியானது என அரசாணை வெளியிட வேண்டும். அப்பொழுது தான் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது. அரசும் மாணவர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும். மேலும் சான்றிதழில் கரோனா தொற்றால் தேர்வின்றி தேர்ச்சி பெற்றுள்ளனர் என குறிப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்" எனக் கூறினார்.