10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! சென்னை: தமிழ்நாட்டில் 2023 - 2024ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 2024 பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடத்தப்படும். மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 மே 10ஆம் தேதி வெளியிடப்படும்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி, 24ஆம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு 2024 மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, மே 14ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 17ஆம் தேதி வரையில் நடத்தப்படும். பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி, மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மே 6ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.
மாணவர்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்வதற்கு போதுமான கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளி விட்டுதான் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பொதுத்தேர்வு வினாத்தாள் மிகவும் கவனமாக தயார் செய்யப்படும். வினாத்தாளில் தவறுகள் ஏற்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்விற்கான பாடங்களை ஆசிரியர்கள் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க உள்ளனர். அரையாண்டுத் தேர்விற்கு முழுப் பாடத்தையும் நடத்தி முடித்து விடுவர்.
தலைமை ஆசிரியர்களிடம் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிப்பது குறித்து ஆன்லைன் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். 92 தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று பள்ளிகளை ஆய்வு செய்து, ஆசிரியர்களிடம் பேசியுள்ளேன். இந்த ஆய்வின்போது, 94 முக்கிய குறிப்புகளை எடுத்து வைத்துள்ளேன். அவற்றை பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்ற விவரம், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கும் நேரத்தில் முழு விவரம் வெளியிடப்படும்.
மாணவர்கள் முழுமையாக படித்து தேர்ச்சி பெற வேண்டும். படிப்பு படிப்பு என்று மாணவர்கள் இருக்க வேண்டும். வேறு எதிலும் மாணவர்கள் நாட்டம் செல்லாமல் படிக்க வேண்டும். தேர்தல் தேதியை மனதில் வைத்து தான் இந்த தேர்வு தேதி முடிவு செய்துள்ளோம். ஏப்ரல் மாதத்தில் இறுதியில் தேர்தல் வரலாம் என்று தெரிகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு அருகே சாணியடி திருவிழா.. பக்தர்கள் மீது சாணத்தை வீசி உற்சாக கொண்டாட்டம்!