பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தற்போது ஏற்பட்டுள்ள சுகாதாரப் பேரிடர் நாம் எதிர் பார்க்காத ஒன்று. ஊரடங்கிற்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யூகித்துப் பார்க்க இயலாத சூழலில் மக்கள் வாழ்கின்றனர்.
இத்தகையச் சூழலில், பத்தாம் வகுப்பு, விடுபட்ட பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகியவற்றின் தேர்வு எழுத இயலாமல் போன மாணவர்களுக்கு எப்போது, எவ்வாறு நடக்கும் என்ற பதட்டத்தில் பெற்றோரும் மாணவர்களும் இருக்கின்றனர்.
சிபிஎஸ்இ வாரியம் பள்ளி திறந்து 10 நாள்கள் வகுப்பு நடந்த பின்னரே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் என்று திட்டவட்டமாகத் தனது சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
அரசாங்களுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை :
1.பள்ளியில் நடைபெறும் நேரடி வகுப்பிற்கு மாற்றாக இணையதள வகுப்பு நடத்தப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. அது குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.
2.இணையதள வழியில் வகுப்பு நடத்தப்படுவதைப் பாடத்திட்ட வேலை நாளாக, நேரமாக அங்கீகரிக்க இயலாது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
3.தமிழ் நாட்டில் உள்ள மத்தியப் பாடத்திட்ட (CBSE / ICSE) பள்ளிகள் உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகள் இணையதள வழியாக வகுப்புகள் நடத்துவதை உடனடியாக நிறுத்தத் தமிழ் நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
4.அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் இத்தகைய வகுப்பு நடத்துவதை அரசு அனுமதிக்கக் கூடாது. கட்டாயப்படுத்திப் பெற்றோரை இணையதள வகுப்பிற்கானக் கருவிகளைப் பெற்றுத் தர வற்புறுத்தக் கூடாது.