இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மூத்தத் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கொடியேற்றினார்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் 1919ஆம் ஆண்டு அக்டோபர் 17இல் தொடங்கப்பட்டது. அதன் நூற்றாண்டு விழாவைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனைகள், கையிலெடுத்த போராட்டங்கள் பற்றி இந்திய மக்களுக்கு தெரிவிக்கும் விதமாக இந்த ஓராண்டு கருத்தரங்கம், பிரசாரம் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அதன் தொடக்க நிகழ்வாக வருகின்ற 20ஆம் தேதி வடசென்னையில் நடக்கயிருக்கும் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த நூற்றாண்டு பயணத்தில் பல சவால்களைச் சந்தித்துள்ளோம். சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர்களை எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைக்குப் பின் காங்கிரஸ் கட்சியின் கார்ப்ரேட் பொருளாதார கொள்கையை எதிர்த்தது. தற்போதுள்ள மோடி தலைமையிலான ஆட்சியிலும் அதே கார்ப்ரேட் பொருளாதார கொள்கையை எதிர்க்கிறோம். மதச்சார்பற்ற கொள்கைக்கு சாவுமணி அடித்து, மதவெறி கொள்கையை செயல்டுத்துவதும், பன்முகத்தன்மையை சீரழிப்பதும், ஒற்றைக் கலாசாரத்தை நிறைவேற்ற முயற்சிப்பதும், போராடி பெற்ற அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சிக்கும் மோடி அரசாங்கத்தின் செயல்களை எதிர்த்துப் போராட வேண்டிய புதிய சவால் இந்தியாவிலுள்ள இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு இடதுசாரி கட்சிகள் மற்ற கட்சிகளைப் போல் பிரிவதும் இல்லை, இணைவதும் இல்லை. சில தத்துவார்த்த ரீதியான கருத்தினால் தான் பிரிந்துள்ளோம். ஆனால், இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் இணைந்து ஒரே தளத்தில் இணைந்து பணியாற்றுவது என்று முடிவெடுத்துள்ளோம். அதன் பரிணாம வளர்ச்சி எப்படியிருக்கிறது என்று இனிவரும் காலங்களில் பார்க்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ விபத்தில் சிக்கி காயம் - மருத்துவமனையில் அனுமதி!