சென்னை சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திடீர் நகர், கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "குடிசைப்பகுதிகளில் இருக்கும் மகளிர் வாழ்வாதரத்திற்கு சிரமப்பட்டு வந்தனர். 1986ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்களை மகளிருக்கு அறிவித்து உள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் H3N2 என்னும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. முதல் முறையாக வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு காய்ச்சல் முகாம் 1,586 இடங்களில் ஒரே நாளில் நடத்தப்பட்டது. 10 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் 14 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர்.
மேலும், 4,308 மருத்துவர், செவிலியர் , மருத்துவம் சார்ந்த காலிப் பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும் என்று கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டது. அதேபோல் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. 1,021 மருத்துவ பணியாளர்கள் தேர்வு குறித்து போடப்பட்டு இருந்த வழக்கு முடிவடைந்துள்ள நிலையில், 1,021 மருத்துவர்களையும் நியமிக்கும் பணி நடைபெற தொடங்கி உள்ளது.