சென்னை:தமிழ்நாட்டில் மழை காலங்களில் வரக்கூடிய டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை தடுக்கும் வகையில் அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தற்போது அதிக மழைப்பொழிவு காரணத்தினால் பருவமழை கால நோய்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக டெங்கு மற்றும் காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக சற்று அதிகரித்து காணப்படுகிறது.
பரவி வரும் டெங்கு: மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவாரூர், கோவில்பட்டி, செய்யார், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் குறைந்தது 1000 காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ குழுவினர் தினந்தோறும் காய்ச்சல் பாதித்த இடங்களுக்குச் சென்று ஆங்காங்கே மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த உள்ளனர். மேலும் இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்துடன் பொதுமக்களுக்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பள்ளி மருத்துவ குழு:இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள். மேலும் 805 RBSK நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள், பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம் ஏற்படுத்தப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.