சென்னை:தமிழக கடலோர காவல் படையின் சார்பாக கடந்த 10ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பெண்களுக்கான படகு சவாரி நிகழ்வைத் துவங்கி வைத்தனர். சென்னையில் இருந்து 1000 கிலோ மீட்டர் தூரம் தரங்கம்பாடி வரை சென்று நேற்று சென்னை திரும்பிய அவர்களை டிஜிபி சைலேந்திரபாபு சென்னை துறைமுகத்தில் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிய டிஜிபி, அவர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “தமிழ்நாடு காவல்துறை மகளிர் காவல்துறையினர் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கக் கூடிய நிலையில் சென்னையில் இருந்து தரங்கம்பாடி வரை கடலில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர் சென்று விட்டு வந்திருக்கிறார்கள்.
24 மகளிர் காவலர்கள் உயர் அதிகாரிகள் இது உலக அளவில் எந்த காவல் துறையும் செய்யாத ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இதற்காக இவர்களுக்கு தேசிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பயிற்சிகள் அளிக்கப்பட்டு பரிசுகளை கோப்பைகளை வெல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே கடத்தல், தீவிரவாதம் போன்றவற்றை கடலோர காவல்படை நடத்தி வருகிறது.
30 காவல் நிலையங்கள், 24 படகுகள், 100 சோதனைச் சாவடிகள் உள்ளன. படகு சவாரி செய்வதற்கும், எதிரிகளைப் பிடிப்பதற்கும் போர் புரிய வேண்டும். இது ஆபத்தான ஒரு விளையாட்டு. திடீரென்று கடல் கொந்தளிப்பு, சீற்றங்கள், புயல் போன்றவை நிகழும். படகு கவிழும்போது படகில் ஒரு மணி முதல் 5 மணி வரை கடலில் தத்தளிப்பது போன்ற ஆபத்துகள் எல்லாம் இந்த படகு சவாரியில் உள்ளது. இதன் மூலம் தன்னம்பிக்கை வரும். ஒரு புத்துணர்ச்சி மற்றும் தைரியம் வரும்.
பெண் காவலர்கள் என்றாலே பெண் குற்றவாளிகளுக்கு காவலுக்கு வைப்பது அவர்களை அழைத்துச் சென்று வருவதற்கும் இது போன்ற பணிகளைத் தான் பாதுகாத்து வந்தனர். ஆனால், தற்போது மிகப்பெரிய பணிகளில் பெண்கள் தான் அதிகம் உள்ளனர். காவல் நிலையம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இருக்கக்கூடிய பெண்களை எல்லாம் பார்க்கிறோம். 500க்கும் மேற்பட்ட நிலைய அதிகாரிகளே இருக்கிறார்கள்.