சென்னை: தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப்போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப்போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஒற்றை ஒப்பந்தப்புள்ளிகளை ஆய்வு செய்யக்கூடாது என்ற மரபுக்கு மாறாக, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விலைப்புள்ளிகளை தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் திறந்து, ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி ஏற்கப்பட்டால் அது பெரும் அநீதியாக அமையும். அரசுத்துறை நிறுவனங்களின் கொள்முதல்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதன் நோக்கமே, அதில் பல நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும்.
அவற்றுக்கிடையே போட்டித்தன்மையை ஏற்படுத்தி, நியாயமான விலையில் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பது தான். ஒரே ஒரு ஒப்பந்தப்புள்ளி மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து விட்டு மறு ஒப்பந்தப்புள்ளி கோராமல், அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது ஒப்பந்தப்புள்ளி கோரும் தத்துவத்திற்கே எதிரானது.