தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்... சமூக ஆர்வலர்கள் கோரிக்கை - மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது

தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை மாற்றினால் பாதிக்கப்பட கூடிய மக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்
100 யூனிட் இலவச மின்சாரத்தை 200 யூனிட் வரை நீட்டிக்க வேண்டும்

By

Published : Sep 13, 2022, 9:49 AM IST

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலக்கரி பற்றாக்குறை காரணமாக அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு நிலவியது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை உயர்த்துவது என்று பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் மின்கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மின்கட்டண உயர்வானது அமலுக்கு வந்துள்ளது. மேலும், ஆண்டுதோறும் கட்டணத் திருத்தம் செய்ய அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய மின்கட்டண உயர்வின்படி, வீட்டு உபயோகிப்பாளர்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 400 யூனிட்கள் வரை பயன்படுத்தி இருந்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 ஆகவும், 400 முதல் 500 யூனிட்டுக்கு ரூ.3 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.6 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500 முதல் 600 வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.8 ஆகவும், 600 முதல் 800 வரை ரூ.9ஆகவும், 800 முதல் 1,000 வரை ரூ.10 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படும்.

1,000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 கட்டணமாக விதிக்கப்படும். தனிப்பட்ட வீடுகள், முதியோர் இல்லங்கள், கைத்தறி போன்றவை அடுக்குகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து நுகர்வோருக்கும் 100 யூனிட் இலவச விநியோகம் தொடரும். மேலும் மானியத்தை விரும்பாதவர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்த பிறகு அதை திரும்பப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்குகள், நீர் வழங்கல், லிப்ட், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளம் போன்ற அனைத்து பொதுவான பயன்பாடுகளுக்கும் தனித்தனி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தங்கள் தொழில்முறை வேலைக்கு வீட்டில் 200 சதுர அடி வரை வீட்டு மின் உபயோகத்திலேயே பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வீட்டு மின் நுகர்வோருக்கு மாதம்தோறும் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை நிலைக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய இணைப்புக்கான கட்டணம் மற்றும் புதிய மின் மீட்டருக்கு வைப்பு தொகைக்கான கட்டணமும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்வாரியம் தெரிவித்திருந்தது. மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை உயர்த்த கொடுத்த அழுத்தமும், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நிலக்கரியின் விலை அதிகமாக இருப்பதாலும் மின் கட்டணம் உயர்த்துவதற்கு காரணம் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் மின்சார வாரியத்திற்கு தற்போது வரை 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி கடன் உள்ளது. மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு மேலும் கடன் வாங்கும் நிலையில் மின்சார வாரியம் உள்ளது. இதனால் தான் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டதாக கூறுகின்றனர்.

மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வானது குறைவாக இருக்கிறது. மேலும் 100 யூனிட் மின்சாரம் இலவச திட்டத்தில் ஒரு கோடி பேர் பயன் பெறுகின்றனர்" என விளக்கம் அளித்தார். மின்சார கொள்முதல், இறக்குமதி விலை மற்றும் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும் நிலையில் வருவாய் குறைவாக இருப்பதே மின்கட்டண உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு மின் வாரியம் சுமார் ரூ.1.60 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர் சிட்டிசன் செந்தில் கூறுகையில், "வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் நுகர்வோர் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 200 யூனிட் வரை மாற்றினால் பாதிக்கப்பட கூடிய மக்களில் அளவை குறைக்கலாம். 8 ஆண்டுகளுக்கு பின் அதிகளவில் மின்கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் பாதிக்கப்பட கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணத்தை ஆண்டுதோறும் சிறிது சிறிதாக உயர்த்தினால் மக்களுக்கு பெரிதாக தெரியாது". என்றார்

மின்கட்டண உயர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் ஒரு சில கோரிக்கைகளை மின்சார வாரியத்திற்கு வைத்துள்ளனர். இதை எல்லாம் அரசு மற்றும் மின்சார வாரியம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

இதையும் படிங்க: கொளத்தூர் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்...

ABOUT THE AUTHOR

...view details