சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நலச் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைக்கான அம்மா நினைவுக் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை இரு அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு அமர்வு கைப்பந்து போட்டி, சக்கர நாற்காலி வாள்வீச்சுப் போட்டி, அமர்ந்து விளையாடும் கபடி போட்டி, உயரம் குறைவான கபடி போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.