சென்னையில் வசித்துவரும் மக்களின் அவசர மருத்துவ உதவிக்காக தமிழ்நாடு அரசால் புதிதாக வாங்கப்பட்ட 9 ஆம்புலன்ஸ் வாகனங்களை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (நவ.25) கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “விபத்துகள், அசாதாரண சூழ்நிலையில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 1300-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையாற்றிவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூடுதலாக பல ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கிவருகிறார்.
சென்னையில் ஏற்கெனவே 96 ஆம்புலன்ஸ் உள்ள நிலையில், மேலும் புதிதாக 9 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்னை மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. அவை இன்றுமுதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் கொள்ளளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. ஏரி தண்ணீர் செல்லும் வழியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைத்து முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானிலை மைய அறிவிப்பைத் தொடர்ந்து கவனித்துவருகிறோம்.
எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.
கடல் சீற்றம் அதிகரித்து உள்புகுந்தால் மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தாழ்வான பகுதியில் வசித்துவந்தவர்கள் அனைவரும் மேடான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வலை, கட்டுமரம், படகுகள், மீன்பிடி சாதனங்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். தற்போது எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர்.
வெள்ள அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்க 100 மீனவர்கள் 100 படகுகள் தயார்! வானிலை மையத்தின் அடுத்த அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். கடற்கரை அருகில் செல்ல வேண்டாம். சென்னையில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களை மீட்க 100 மீனவர்கள் 100 படகுகள் தயார் நிலையில் உள்ளன. எல்லா இடங்களிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புயல் பாதுகாப்பு மையங்கள், இதர தங்கும் மையங்களில் ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளோம். இதுதவிர தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வருகைதந்துள்ளனர். சேதங்கள் கணக்கிடப்பட்ட பின் மத்திய அரசிடம் நிதியுதவி கோருவோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க :நிவர் புயல்: கடலோர காவல் படையின் 12 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார்