சென்னை அரும்பாக்கத்தில் சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் எம்.எல்.எம் நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களில் முதலீடு செய்பவர்களின் பணம் 100 நாட்களில் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தங்களின் பணம் இரு மடங்காக கிடைக்கும் என இந்த நிறுவத்தின் உரிமையாளர் பார்திபன், சிவக்குமார், யுவராஜ், ஹரிஷ்வாணன் உள்ளிட்டோர் கூறிய வார்த்தைகளை நம்பி 500 க்கும் மேற்பட்டோர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.
அந்த நிறுவனம் கூறியது போல நூறுநாள்கள் முடிவடைந்ததும் தங்களது பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என மூதலீடு செய்தவர்கள் எண்ணியிருந்த நிலையில், நூறுநாள் முடிவடைந்து பணத்தை கேட்க ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் அலுவலத்திற்குச் சென்ற போது அலுவலகத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகியது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தால் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்டோர் இன்று சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளிப்பதற்கு வந்திருந்தனர்.