தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் 10 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை! - reason for tiger death

10 Tigers death reason: நீலகிரி பகுதியில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து 10 புலிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலிகள் ஆணையம் அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 7:57 PM IST

சென்னை: நீலகிரி பகுதியில் சில மாதங்களில் 10 புலிகள் திடீரென உயிரிழந்தன. அவற்றின் இறப்பு குறித்த விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி ரமேஷ், இந்திய வனவிலங்கு நிறுவன மண்டல துணை இயக்குநர் கிபாசங்கர், சென்னை வனவிலங்கு ஆய்வர் டோக்கி ஆதில் லையா ஆகியோர் அடங்கிய குழு, கடந்த மாதம் 25ஆம் தேதி புலிகள் இறந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2006 அகில இந்தியப் புலிகள் கணிப்பின்படி புலிகள் எண்ணிக்கை 76 ஆக இருந்தது, 2022ல் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி தற்போது 306 புலிகளாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், முதுமலை புலிகள் காப்பகத்தில் 2006 இல் 51ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022ம் ஆண்டு 114 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு புலிகள் காப்பகத்திலும் 'மேலாண்மை திறன் மதிப்பீட்டை' நடத்தி மதிப்பெண் வழங்குகிறது. அதன் அடிப்படையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு 2022ம் ஆண்டில் சிறந்த மதிப்பெண் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நீலகிரி பகுதியில் 10 புலிகள் இறந்தன. இது குறித்த அறிக்கையைத் தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாராவ்ரெட்டி தற்போது வெளியிட்டுள்ளார். அதில், "முதுமலை புலிகள் அடர்ந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் விலங்குகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. பொதுவாக வயது முதிர்ந்த பெண் புலிகள் ஒரு பிரசவத்தில் 5 குட்டிகள் வரை ஈனும். இதில் 50 சதவீதம் குட்டிகள் நோய், பட்டினி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

சீகூர் பகுதியில் 2 வாரக் குட்டிகள் இறப்பதற்கு சாத்தியமான காரணம், 2 குட்டிகளின் உடல் நலம் குன்றியதாக இருக்கலாம். இது அடுத்தடுத்த பிரசவங்களில் தகுந்த குட்டிகளை வளர்ப்பதற்கான ஆற்றலைச் சேமிப்பதற்காக தாயால் கைவிடப்படுவதற்கு வழிவகுக்கும். மேலும், இளைய வயதில் குட்டிகள் பிரசவம் (அனுபவமற்ற தாய்) குட்டிகளைக் கைவிடப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சின்ன குன்னூர் பகுதியில் உயிரிழந்த நான்கு குட்டிகள் இரண்டு மாதங்களே ஆனவை. இந்த வயதில் குட்டிகள் தாயால் கொல்லப்படும் உணவை உண்ணத் தொடங்கும். அதனால் குட்டிகளை வளர்க்கத் தாய் அடிக்கடி இரையைக் கொல்ல வேண்டும். பின்னர் இரை அடர்த்தி குறைவாக இருந்தால் தாய் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். இது நீண்ட காலத்திற்குக் குட்டிகளை கவனிக்கப்படாமல் இருப்பதற்கு வழி வகுக்கிறது. எனவே, நீண்ட பட்டினியால் குட்டிகள் இறந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நடுவட்டம் மற்றும் கார்குடி ஆகிய இரண்டு இடங்களில் புலிகள் இறந்தது உட்பூசல் சண்டையின் காரணமாகும் என கூறப்பட்டுள்ளது. அவலாஞ்சி பகுதியில் இரண்டு புலிகள் (இரண்டு ஆண்களும்) விஷம் கலந்த இறந்த மாட்டின் உணவை சாப்பிட்டதால் இறந்தது என தெளிவாகத் தெரிவதாகவும், இறந்த மாட்டில் விஷம் வைத்த நபர் ஏற்கனவே வன துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இது முற்றிலும் பழிவாங்கும் கொலை என்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.

இறந்த புலிக்குட்டிகளின் தாய்களை அடையாளம் காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கூறுகையில், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 6 குட்டிகள் இறந்த இடங்களை சுற்றி ட்ராப் கேமராக்கள் பொருத்தப்பட்டன. சின்ன குன்னூர் பகுதியில் 40 இடங்களிலும், சேகூர் பகுதியில் 18 இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் அப்பகுதியில் எடுக்கப்பட்ட எச்ச மாதிரிகளை குழுக்கள் சேகரித்துள்ளனர். சேகரிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சமீபத்தில் நீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேட்டை தடுப்பு காவலர்களை வன காவலர்களாக அரசு முறைப்படுத்தியுள்ளது.

நீலகிரி கோட்டம் மற்றும் தாங்கல் கோட்ட எல்லையில் உள்ள முதுமலை தாங்கல் பகுதிகளில் கூடுதலாக 3 வேட்டை தடுப்பு முகாம்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்து: தருமபுரியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள் பலி!

ABOUT THE AUTHOR

...view details