எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:உயர்த்தப்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றதாக அறிந்தேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்...
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்: பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில பல நல்ல கருத்துகளை கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 9 மணி வரை நடைபெற்றது. அப்போது பகிரப்பட்ட கருத்துகள் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து பின்தங்கிய வகுப்பினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முடிவு எடுக்கும்.
துரைமுருகன்: அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் சில கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதில் பாரபட்சம் பார்க்கக்கூடாது.
ஓ. பன்னீர்செல்வம்: எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த ஒரு பட்டியலின் அடிப்படையில்தான் சில கட்சிகளை அழைத்தோம். இதில் பாரபட்சம் எதுவும் பார்க்கவில்லை, எதிர்வரும் காலங்களில் இது போன்று நடைபெறாது. மேலும் சில கட்சிகளும், அமைப்புகளும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்களுக்காக செயல்பட்டு வருகின்றன. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பல அரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: நான் அனைத்து கட்சிகளையும் அழைக்குமாறு கூறவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடு ஜெயலலிதா அறிவித்தபோது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவருக்கு விருது வழங்கினார். எனவே அவரை அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் அனைத்துக் கட்சிகளையும் அழைத்தீர்கள். அதை நான் தவறு எனக் கூறவில்லை. ஆனால் இன்னும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கட்சிகளை ஏன் அழைக்கவில்லை , உங்களுக்கு ஆதரவான கட்சிகளை அழைத்தீர்கள். முதலில் முதலமைச்சர் ஏன் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் நான் முதலில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்...
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கடிதம் கொடுக்கும்போது துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெளிவாக கடிதம் கொடுத்திருந்தோம். இதற்கு முன்னரும் பல கூட்டங்கள் அவர் தலைமையில் நடைபெற்றுள்ளதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மு.க.ஸ்டாலின்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐஜேகே, மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: அப்படி கூப்பிட வேண்டும் என்றால் 80 கட்சிகளை கூப்பிட்டு ஒரு நாள் முழுவதும் விவாதம் செய்திருக்க வேண்டும். சில கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும் என நினைத்து கூப்பிட்டோம்.
ஓ. பன்னீர்செல்வம்: எதிர்காலத்தில் இதுபோல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும்.