சென்னையில் பல்வேறு இடங்களில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பலர் நில மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில நாள்களில் மட்டும் இது குறித்து வெவ்வேறு இடங்களில் 10 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து, குற்றப்பிரிவு காவல் துறையினரால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை பள்ளிக்கரணை ராம் நகரில் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த ஆதித்யா வித்யாலயா பள்ளி தாளாளர் பஞ்சமூர்த்தி என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். நிலத்தின் உரிமையாளரான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவர்போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடிசெய்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், மதுரவாயல் வரலட்சுமி நகரில் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் செய்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நான்காயிரத்து 800 சதுரஅடி நிலத்தை மோசடிசெய்த, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ், ரமேஷ் என்ற சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதேபோன்று ஆள்மாறாட்டம், போலி ஆவணம் மூலம் மோசடிசெய்து மடிப்பாக்கத்திலுள்ள ஒரு கோடி ரூபாய் நிலத்தை அபகரித்து குடியிருப்புகள் கட்டி விற்பனைசெய்த விவகாரத்தில், ஆள்மாறாட்டம் செய்த ராஜமன்னார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். நாகலிங்க மூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.