மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவடைந்த (EWS) பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.
சமூகநீதி தளத்தில் தமிழ்நாடு எப்போதும் ஒருபடி முன்னணியில் இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய வலுவான கோரிக்கைகளின் அடிப்படையில் இன்றைக்கு ஒன்றிய அரசு பிற்படுத்தப்பட்டோடுக்கான இட ஒதுக்கீடு 27 விழுக்காடு என்பதை அறிவித்திருக்கிறது. இருப்பினும் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெறும் வரை நமது போராட்டம் ஓயக் கூடாது.
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சிக்கு எதிர்வினை வந்துவிடக் கூடாது என்பதற்காக பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறது என்கிற ஐயப்பாடு எழுகிறது.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடு இருக்கும் நிலையில் இந்திய அளவில் வெறும் 27 விழுக்காடு மட்டும் வழங்கி மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு எந்தவிதமான சமுதாய புள்ளிவிபர கணக்கெடுப்புகளும் இல்லாமல் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது சமூக நீதி சிந்தனையின் அடிப்படை கோட்பாட்டையே சிதைப்பது போன்று உள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதாரநிலை ஒருபோதும் அளவுகோலாக இருக்க முடியாது. எனவே ஒன்றிய அரசு பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தவேண்டும் என்றும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புல்வாமா துப்பாகிச் சூடு - 2 பயங்கரவாதிகள் கொன்ற பாதுகாப்பு படை