தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Toxic Liquor Death: விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 10-ஆக உயர்வு! - Tamil Nadu toxic liquor death update

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 15, 2023, 8:21 AM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார். அதனை அப்பகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி, சங்கர், தரணிவேல், ராஜமூர்த்தி, சுரேஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கிக் குடித்துள்ளனர்.

கள்ளச்சாராயத்தை குடித்த அனைவரும் அடுத்தடுத்த மயங்கி விழுந்ததால் அவர்களை மீட்ட உறவினர்கள் காலாப்பட்டு பிம்ஸ் மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில், சங்கர், சுரேஷ் மற்றும் தரணிவேல் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி மற்றும் மலர்விழி ஆகியோரும் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கரணை இருளர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி ( வயது 30), இவரது மனைவி அஞ்சலி (22),அஞ்சலியின் தாய் வசந்தா ஆகிய 3 பேரும் கடந்த 12-ஆம் தேதி இரவு கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். பின்னர், வீட்டிலேயே மயங்கி விழுந்த 3 பேரும், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி, சின்னதம்பி மற்றும் வசந்தா ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் அஞ்சலி தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இவர்களது உறவினரான பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வென்னியப்பன் ( வயது 65), அவரது மனைவி சந்திரா (55) ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டின் அருகே நேற்று காலை இறந்து கிடந்துள்ளனர். இதனால் இரு மாவட்டங்களிலும் கள்ளச்சாராயத்திற்கு பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல ஐஜி கண்ணன், " கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக அமரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவான 4 பேரை பிடிக்க 10 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார். மரக்காணம் விவகாரத்தில், ஆய்வாளர் அருள் வடிவழகன், விழுப்புரம் மதுவிலக்கு ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் தீபன், சிவகுருநாதன் ஆகிய 4 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், செங்கல்பட்டு விவகாரத்தில், மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகிய 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐஜி கண்ணன் தெரிவித்தார். முன்னதாக விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்த முதலமைச்சர் அவர்களது குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details