சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பலர் உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசின் முயற்சியால், கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கரோனா உயிரிழப்புகளை தடுப்பூசியால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருகின்றனர்.
விமானம் மூலம் வந்த தடுப்பூசிகள்
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பலரும், இரண்டாம் டோஸ் செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி ஒன்றிய அரசும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 58 பார்சல்களில், 6 லட்சத்து 93 ஆயிரத்து 970 கோவீஷீல்ட் தடுப்பூசிகள் இன்று (ஆக. 20) சென்னை வந்தடைந்தன.
இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட தடுப்பூசி பார்சல் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் வழங்கல்
இவை தேவைக்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். அதேபோல் மத்திய தொகுப்பிற்கு 27 பார்சல்களில் வந்த 3 லட்சத்து 24 ஆயிரம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள், பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு கொண்டுசெல்லப்பட்டன.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் - ராதாகிருஷ்ணன்