சென்னையில் ஆயிரத்து 327 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரையிலும் 586 காவலர்கள் கரோனா குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதில், சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் சேகர் தேஷ்முக் உள்பட 10 காவலர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்து இன்று பணிக்கு திரும்பும் நிகழ்ச்சி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பங்கேற்று காவலர்களுக்கு பூங்கொத்து, சான்றிதழ் வழங்கி வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சேகர் தேஷ்முக், “ கரோனா தொற்று ஏற்பட்டால் பயப்படாமல் எதிர்த்து நின்றால் வென்றுவிடலாம். நான் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது காவல் துறை அலுவலர்கள் பலரும் ஊக்குவிக்கும் விதமாக பேசினர். பொதுமக்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை சரியான முறையில் பராமரித்து அணிய வேண்டும் கரோனா சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய எனக்கு காவல் துறை அளித்த வரவேற்புக்கு நன்றி” என்றார்.
காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பேசிய காணொலி இதனை தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், “சென்னையில் கரோனா நோயால் 1327 காவலர்கள் பாதிக்கப்பட்டு, அதில் 586 காவலர்கள் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இன்று 1 துணை ஆணையர் உள்பட 10 காவலர்கள் பணிக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 6) கரோனா ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் நாகராஜன் உயிரிழந்துள்ளது மனவேதனை அளிக்கிறது. சென்னையில் மூன்றாவது காவலர் கரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழப்பு!