இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் இதுவரை 67 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும் மதுரையில் உயிரிழந்தார். தற்போது 60 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒருபுறம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழ்நாடு அரசு, மறுபுறம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக 2,500 வென்டிலேட்டர்களைப் புதிதாக வாங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், 25 லட்சம் N-95 மாஸ்க்குகள் உள்பட 1.75 கோடி மாஸ்க்குகளை வாங்குவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.