சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு, துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று (ஏப்.18) காலை வந்தது. அதே விமானம் மீண்டும் உள்நாட்டு பயணமாக ஹைதராபாத் செல்லவிருந்தது. இதையடுத்து விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விமானத்தின் கழிவறை தண்ணீா் தொட்டிக்குள் பாா்சல் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்ட ஊழியர்கள் சுங்கத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் வெண்மை நிற வா்ணம் பூசப்பட்ட தங்க தகடு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து விமானத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தல் ஆசாமியை தேடும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.