வெளிநாடுகளிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணி மூலம் பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சோ்ந்த சா்மிளா பானு (26) என்பவரைச் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 20 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 468 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த கோவையைச் சோ்ந்த செல்வி (35) என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் கைப்பையில் தங்கச்சங்கிலியை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 15 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 350 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.