சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, இன்று (செப்.26) துபாயில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று வந்தது. அப்போது அதில் வந்த பயணி ஒருவர் அவசரமாக வெளியே செல்ல முயன்றாா். இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அலுவலர்கள், அந்த பயணியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், சுங்கத்துறை அலுவலர்கள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் அவர் தனது உள்ளாடைக்குள் ரூ. 39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 864 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரே நாளில் 1,383 கிராம் தங்கம் பறிமுதல்
இதே போல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பயணி ஒருவரிடம் ரூ. 18 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள, 349 கிராம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 170 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று (செப்.26) ஒரே நாளில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ. 65 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள, 1,383 கிராம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க குழு அமைத்தது அரசு