தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் சுப்பிரமணி ஆன்மீக சேவகர் பங்காரு அடிகளார் ஆனது எப்படி? - The Full Life History of Melmaruvathur

History of Bangaru Adigalar: தமிழக மட்டுமல்லாது சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இன்று (அக்.19) இயற்கை எய்தினார். இந்நிலையில், அவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 10:58 PM IST

Updated : Oct 20, 2023, 2:56 PM IST

செங்கல்பட்டு:மேல்மருவத்தூர் பகுதியில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர், சுப்பிரமணி. இவர் தனது பள்ளிப் படிப்பை மேல்மருவத்தூர் அருகே உள்ள உள்ள சோத்துப்பாக்கம் பள்ளியில் முடித்தார். அதன்பின், அச்சரப்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். அதன்பிறகு, ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பணியிலிருந்தாலும், ஆன்மீக நாட்டம் காரணமாக மேல்மருவத்தூர் பகுதியிலிருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து அருள்வாக்கு கூறத் தொடங்கினார்.

இதனைத்தொடர்ந்து, அவரது புகழ் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது. இந்த நிலையில், வெளியாகிய மேல்மருவத்தூர் அம்மன் பற்றிய திரைப்படங்களும் பக்தர்கள் கவனத்தை இவரின் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தன.ஒரு கட்டத்தில் கடவுள் இருக்கும் கருவறைக்குள் பெண்களும் வந்து வழிபடலாம் என அவர் அறிவிக்கத் அது பெரும் சமூதாய புரட்சியாக பார்க்கப்பட்டது. தமிழக பக்தர்கள், குறிப்பாக, பெண் பக்தர்கள் இடையே இவருடைய 'சித்தர் பீடம்' புகழ்பெறத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தனது பெயரை 'பங்காரு அடிகளார்' (Bangaru Adigalar) என மாற்றிக்கொண்டு முழுநேர ஆன்மீகத்தில் இவர் ஈடுபடத் தொடங்கினார்.

தமிழகத்திலிருந்து பெரும்பாலான பக்தர்கள் கேரள மாநிலம், சபரிமலை மற்றும் ஆந்திர மாநிலம், திருப்பதி போன்ற புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், அந்த கோயில்களுக்கு இணையாகத் தமிழகத்தில் 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்' (Melmaruvathur Adhiparasakthi Siddhar Peedam) புகழ்பெறப் பங்காரு அடிகளார் காரணமாக இருந்தார். சர்வதேச அளவிலும், இந்த சித்தர் பீடத்துக்குப் பக்தர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகப் பணியோடு, பள்ளி கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என மேல்மருவத்தூர் இந்திய வரைபடத்தில் ஒரு முக்கிய இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.

'செவ்வாடை' என்றாலே 'மேல்மருவத்தூர்' எனும் பெயர் சர்வதேச அளவில் நிலைக்கப் பெற்றது, வரலாற்று நிகழ்வாகும். இவரது ஆன்மீகப் பணி இந்திய அரசின் கவனத்தை ஈர்த்ததால் பங்காரு அடிகளார் அவர்களுக்கு 'பத்ம ஸ்ரீ விருது' (Padma Shri Award) அளித்துக் கௌரவித்தது, மத்திய அரசு. தற்போது 82 வயதாகும் நிலையில் அருள்மிகு பங்காரு அடிகளார் அவர்கள் அமரர் ஆகியுள்ளார். தமிழக ஆன்மீக வரலாற்றில் பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் பணி என்றென்றும் நினைவுக் கூறப்படும் என்பதுதான் உண்மை.

பங்காரு அடிகளார் மறைவைதொடர்ந்து மதுராந்தகம், மேல்மருவத்தூர் சுற்று வட்டாரப் பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நாளை விடுமுறை அறிவித்துள்ளது. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புக்காக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தலைமையில் ஏராளமான போலிசார் மேல்மருவத்தூர் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பங்காரு அடிகளார் இயற்கை எய்திய நிலையில், அவரது பக்தர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து கதறி அழுது வருகின்றனர்.

இதனிடையே, இவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பங்காரு அடிகளார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு என அறிவிப்பு!

Last Updated : Oct 20, 2023, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details