செங்கல்பட்டு:அண்மைக் காலமாக முகப்புத்தகம்(Facebook) வீடியோக்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் வீடியோக்களில் செங்கல்பட்டு பிரமீளா வீடியோக்களும் உள்ளன. திமுக, அதிமுக, சசிகலா, பாஜக என அனைத்து தரப்பினரையும் அலறவிட்டு வருகிறார் உப்பளப்பட்டி பிரமீளா. பேஸ்புக் வாசிகளை விலா நோகமல் சிரிக்க வைக்க இரவது முதலீடு கதவு, ஜன்னல் சாத்தப்பட்ட ஒரு சிறிய அறை மற்றும் ஒரு செல்போன் மட்டுமே.
பூட்டிய அறைக்குள் இருந்துக் கொண்டே இவர் பேஸ்புக் வாயிலாக தெறிக்கவிடும் கருத்துக்களைப் பார்த்து சிரித்து மகிழ்வதோடு அய்யோ பாவம் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி ஒரு வீடியோவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் முறைப்பெண் எனவும், தன்னிடம் வம்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் எச்சரிக்கை தொனியில் பேசியுள்ளது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு ஒருபடி மேலே சென்று தன்னை பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இவர்களை எல்லாம் விசாரியுங்கள் என திமுக முக்கிய நிர்வாகிகள் பெயரில் சில செல்போன் எண்களையும் பகிர்ந்துள்ளார். தன்னால் தான் திமுக ஆட்சியில் இருக்கிறது எனவும், தான் மைக்கை பிடித்து பொதுவெளியில் பேசத் தொடங்கினால் திமுக, அதிமுக இரண்டும் காணாமல் போகும் எனவும் அக்கப்போர் செய்து வருகிறார் பிரமீளா.
சசிகலா, டிடிவி தினகரன் என்று சகட்டுமேனிக்கு அனைவரையும் இழுத்து வைத்து குமுறி எடுக்கும் இந்த அம்மணியைப் பற்றி விசாரித்தால் சில சுவாரஸ்யமான தகவல்கள் வருகின்றன. இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் வசித்து வருகிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016 ஆம் ஆண்டு இவர் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அப்போது இவர் என்னவாக இருந்தார் என்ன செய்து கொண்டு இருந்தார் என்பது பற்றி எல்லாம் தகவல் இல்லை. அந்தப் புத்தகத்தை அனைவரும் வாங்கி படித்தால் தமிழக வரலாறு மட்டுமல்ல இந்திய சரித்திரமே மாறும் என்று ஓவர் பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார்.
இதில் ஒரு சோகமான காமெடி என்னவென்றால் அந்த புத்தகத்தை இவர் வெளியிடும்போது இவருக்கு பிஜேபியினர் முழுமூச்சாக உதவியுள்ளனர். அது குறித்த வீடியோ மற்றும் போட்டோ பதிவுகளையும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றி பாஜகவின் மானத்தையும் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் முன்னாள் முக்கிய பிரபலமும், இந்நாள் மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன், கே.டி.ராகவன் ஆகியோருடன் புத்தக வெளியீட்டு விழாவில் எடுத்துக்கொண்ட வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிந்துள்ளார் பிரமீளா.