செங்கல்பட்டு:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இது 1936ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பதற்காக, 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருவது வழக்கமாக இருந்துவந்த நிலையில், இதன் சுற்றளவைக் குறைப்பது, இயற்கைக்கு மாறானது எனவும், பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பறவைகள் பாதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.