செங்கல்பட்டு: வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களில் கீழ்நிலைப் பணியாளர்கள், குறிப்பாக பராமரிப்பு, சுத்திகரிப்பு போன்ற பணிகளில் 400க்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தங்களை, நிரந்தர ஊழியர்களாக ஆக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பணி மூப்பு, அனுபவம், தகுதி அடிப்படையில் பணி நிரந்தரம் வேண்டும் என்பதே இவர்களின் நெடுநாளைய கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இவர்களை தனியார் நிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சி நடைபெறுவதாக ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அவர்களின் கீழ் இந்த ஊழியர்கள் பணி புரியவேண்டும் என்று நிர்வாகம் சமீபத்தில் முடிவெடுத்து அறிவித்தது. இதன் முதல் கட்டமாக, தனியார் நிறுவனத்தை வரவழைத்த பூங்கா நிர்வாகம், குறிப்பிட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு போன்ற விவரங்களைக் கட்டாயப்படுத்திப் பெற்று, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் இதனால் அதிர்ச்சியடைந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூங்கா நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முடிவை கைவிடும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:வண்டலூர் பூங்காவில் சிம்பன்சி குட்டியின் பிறந்த நாளை 'கேக்' வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்