தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 17, 2020, 10:37 PM IST

ETV Bharat / state

சாலை விரிவாக்கப் பணியால் மரங்கள் அழிப்பு: வேதனையில் மக்கள்!

செங்கல்பட்டு: சாலை விரிவாக்கப் பணியால் பச்சைப் பசேலென காணப்பட்ட சாலை பொட்டல் சாலையாய் மாறவிருப்பது, சமூக ஆர்வலர்களையும் வாகனங்களில் பயணிப்போரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெட்ட தயாராகவுள்ள மரங்கள்
வெட்ட தயாராகவுள்ள மரங்கள்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் கிழக்குக் கடற்கரைச் சாலையையும், வந்தவாசியையும் இணைப்பது, செய்யூர் - வந்தவாசி சாலை. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வரும் இந்தச் சாலை, தற்போது விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தற்போதுள்ள சாலை சற்றே குறுகலாக இருப்பதாலும், வாகனப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகமாவதாலும், இந்தச் சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து செய்யூர் வரை, ஏறத்தாழ 115 கிலோ மீட்டர் இந்தப் பணி நடைபெறவுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் மட்டும் 35 கிலாே மீட்டர் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. சாலை விரிவாக்கத்தால், வாகன நெரிசல் குறைந்து, விபத்துகள் குறையும் என்றாலும் பல ஆயிரம் மரங்கள், விரிவாக்கப் பணிக்களுக்காக வெட்டப்படவுள்ளது அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பச்சைப் பசேலென காணப்பட்ட சாலை:

வந்தவாசியிலிருந்து செய்யூர் வரை நீளும் இந்தச் சாலை, இருபுறமும் மரங்கள் அடர்ந்து, பசுமைச் சாலையாகக் காணப்படுகிறது. சாலையில் பயணிப்போர் பெரும்பாலும் நிழலிலேயே, குளுகுளுவெனப் பயணிக்கும் அளவு, இருபுறமும் மரங்களின் அணிவகுப்பு நீண்டு காணப்படுகிறது.

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த மரங்கள் தற்போது வெட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரிவாக்கப் பணியின்போது, இது தவிர்க்க முடியாதது என்றும், இதற்காகப் பல புதிய மரங்கள் நடப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், தற்போதுள்ளது போல, பச்சைப் பசேல் என மீண்டும் இந்த பயண வழிச்சாலை மாறுமா, அப்படியே மாறும் என்றாலும் அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமாே என்ற ஆதங்கம் அனைவரிடமும் காணப்படுகிறது.

வேதனையில் மக்கள்:

பசுமை வழிச்சாலை அழிக்கப்படுவது ஒருபுறம் என்றால், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மற்றொரு வருத்தமும் காணப்படுகிறது. இந்த மரங்களில் பெரும்பாலும் புளிய மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்களை கிராமப் பஞ்சாயத்து மூலம் ஏலம் எடுப்பது, பல கிராமங்களின் வருவாய் ஆதாரமாக இருந்து வந்துள்ளது.

வெட்டத் தயாராகவுள்ள மரங்கள்
புளி விற்பனை மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் நிதி, அந்தந்த கிராமப் பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்திற்கு செலவழிக்கப்பட்டு வந்தது என்கின்றனர், கிராம மக்கள். தற்போது அந்த வருவாய் தடைபடும் என்பதால், அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். மேலும், முன்னேற்றத்திற்கான பயணத்தில் சிலவற்றை இழக்க நேரிடுவது தவிர்க்க முடியாது என மனதைத் தேற்றிக் கொள்வதுதான் இப்போதைக்கு எங்களால் செய்ய முடிந்தது என வேதனை தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்

இதையும் படிங்க: தனிநபர் வளர்த்துவந்த சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

ABOUT THE AUTHOR

...view details