செங்கல்பட்டு:உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் மத்திய சுகாதாரத் துறையின் சார்பில் இன்றுமுதல் 15 லிருந்து 18 வயதுக்குள்பட்டவர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்றுமுதல் குறிப்பிட்ட இந்த வயதினருக்குச் செலுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் 15 வயதுமுதல் 18 வயதுவரை உள்ள சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமை தா.மோ. அன்பரசன் தொடங்கிவைத்தார். இந்தப் பள்ளி முகாமில் 15 வயதுக்கு மேற்பட்ட 494 மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
செங்கல்பட்டில் 57 சதவீதம் தடுப்பூசி
அங்கு உரையாற்றிய தா.மோ. அன்பரசன், "மீண்டும் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது எனச் சுகாதார அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 87 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியும், 57 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். ஒரு சிலர் இன்னும் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கரோனா ஏற்பட்டாலும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். கிராமப்புறங்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்தவில்லையோ அவர்களைக் கண்டறிந்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வீட்டுக்கே சென்று தடுப்பூசி முழுமையாகச் செலுத்த ஏற்பாடுசெய்ய வேண்டும்.
ஸ்டாலின் நாளில் 20 மணிநேரம் மக்கள் பணி செய்கிறார்
திமுக ஆட்சி பொறுப்பேற்று தற்போதுவரை தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள 25 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிச் செயல்படுத்தியுள்ளது. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்கள் பணியே லட்சியம் எனச் செயலாற்றிவருகிறார்" எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி