செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மொறப்பாக்கம், முனியந்தாங்கல், வேடந்தாங்கல், முதுகரை உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அப்பகுதி விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவந்தது.
அதையடுத்து கடந்த 20 நாள்களுக்கும் மேலாக அந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 200, 300 மூட்டைகள் மட்டுமே அரசு கொள்முதல் செய்துவந்தது. மீதமுள்ள மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை முதல் சுமார் 3 மணி நேரம் விட்டுவிட்டு பெய்த கனமழையால் மொறப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின. அதனால் விவசாயிகளுக்கு சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.