செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களின் திருடு போவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அடுத்து மாவட்ட எஸ்.பி பிரதீப், மேல் மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் சித்தாமூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன சுந்தரம் ஆகியோர் தலைமையில், தனிப்படை ஒன்றை அமைத்து, தீவிர வாகன சோதனைக்கும் கண் காணிப்புக்கும் உத்தரவிட்டிருந்தார்.
சூணாம்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம் பகுதியில் தனிப் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் அளித்ததால் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்ததும் தெரியவந்தது. இவர் மீது பல்லாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிந்தது. இரு சக்கர வாகனங்களைத் திருடிய விஜயகுமார், அவற்றை நரிக் குறவர்கள் மற்றும் அதிகம் கேள்வி கேட்காத பாமர மக்களிடம் குறைவான விலைக்கு விற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜயகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற தனிப் படையினர் இவர் திருடி விற்றிருந்த வாகனங்களை மீட்டு உள்ளனர். சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 இருசக்கர வாகனங்கள் தனிப் படையினரால் மீட்கப்பட்டது.