செங்கல்பட்டு:அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்துக்கு உட்பட்டது. இங்குள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.கவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பதவி வகித்து வருகிறார்.
இங்கு நடைபெறும் பணிகள் பெரும்பாலும் முறைகேடாகவும், தரமற்று நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இங்குள்ள ஜின்னா நகர் குடியிருப்பு பகுதியில் சமீபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டது. தரமற்ற வகையில் இந்தச் சாலை அமைக்கப்பட்டதால், சில நாட்களிலேயே சாலை பெயர்ந்து வருகிறது.
வெறும் கைகளால் பெயர்த்து எடுத்து விடும் நிலையில் படுமோசமாக இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள கஸ்தூரி நகருக்கு குடிநீர் விநியோகிக்கும் பைப்லைன் கழிவு நீர் கால்வாய் வழியாக செல்கிறது. இந்த பைப் லைன் சமீபத்தில் பழுதடைந்ததால், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இந்தப் பிரச்னைகள் குறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று (ஆகஸ்ட் 21) அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் சென்று நேரடியாக பிரச்சனை குறித்து கூறி நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளனர்.