செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார்குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற 24 வயது இளம்பெண், ஜூன் 24ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் புகார் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், செய்யூர் காவல் துறையினர் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன்பின் சசிகலாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார்.
மேலும், தேவேந்திரன் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும் தன் தங்கையை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக குற்றம் சாட்டியிருந்தார். தங்கை சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்துவைத்து, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.
இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார். இந்நிலையில், சசிகலாவின் மரணம் குறித்த செய்யூர் காவல் நிலைய வழக்கை, சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி அவரது தயார் சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், சசிகலா மரணம் தொடர்பான வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருவதாகவும், விசாரணை முறையாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரும் தன் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்திலோ வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் காவல் துறை முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி, இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், தொடக்கத்தில் இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தாகவும், பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக புருசோத்தமன், தேவேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு தற்கொலை செய்து கொண்ட சசிகலாவின் உறவினர்கள் சிலர் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, சசிகலாவின் உறவினர்களான சுமன், அரவிந்த், சுரேஷ் ஆகியோர் செய்யூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், செய்யூர் காவல் நிலையம் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ள அனுமதியளித்த நீதிபதி, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை நடத்தி 12 வாரத்தில் இறுதி விசாரணை அறிக்கையை காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கின் முழு விசாரணையும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டார்.