சென்னை:தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை இன்று வரை 683.4 மில்லி மீட்டர் பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவான 385.9 மில்லி மீட்டரை விட 77 விழுக்காடு கூடுதலாகும்.
அதிகளவில் பெய்த கனமழையால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. விவசாய நிலங்கள், கால் நடைகள், விவசாயப் பொருட்கள் விற்பனை என விவசாயிகள் கடுமையானப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கன மழையால் விவசாயம் தொடர்பான பாதிப்புகளை கணக்கீடு செய்ய மகசூல் அறக்கட்டளை மற்றும் கிராம் வாணி இணைந்து செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளிடம் ஆய்வு ஒன்று மேற்கொண்டது.
வடகிழக்குப் பருவமழை பாதிப்பு ஆய்வு
ஆய்வில் பங்கேற்ற விவசாயிகளில் 70% பேர் நெற்பயிர்களும், 20% கால்நடை வளர்ப்பிலும் மற்றும் 10% பேர் தோட்டக்கலை விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளில் 60%க்கும் மேற்பட்டவர்கள் தற்போதைய கனமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக நடவு செய்துள்ளனர். நெற்பயிர்கள் பயிரிடும் 51% விவசாயிகள், தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் 40% விவசாயிகள் தங்கள் நிலங்களில் வடிகால் வசதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நெற்பயிர்கள் பயிரிடும் 40% விவசாயிகளும், தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் 60% விவசாயிகளும் தங்களிடம் பயிர் காப்பீடு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்ற கால்நடை வளர்ப்பு விவசாயிகள் 43% பேர் கன மழையால் கால்நடை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 78% பேர் தங்களுடைய கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். ஆய்வில் பங்கேற்ற 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
கன மழையால் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட அளவில் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட அளவில் அனைத்து விவசாய நிலங்களிலும் வடிகால் வசதி உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு பதிவு செய்துள்ளதை உறுதி செய்யவேண்டும். இதற்கான விழிப்புணர்வுக் கூட்டம், பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்களை மாவட்ட அளவில் நடத்த வேண்டும்.
கன மழையால் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கணிக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கன மழையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள கோமாரி நோயை குணப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: போலி கரோனா பரிசோதனை சான்றிதழ்தாரர்கள் மீது கடும் நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி