செங்கல்பட்டு:'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தியானபீடம்' என்ற பெயரை தமிழ்நாட்டில் தெரியாதவரே இருக்க முடியாது. ஐப்பசி மாதம் தொடங்கினாலே, தமிழ்நாட்டில் சிவப்பு நிற ஆடையணிந்தவர்கள் அணிவகுப்பு செய்வதைப் போல, திரும்பும் திசையெங்கும் இருப்பர். மேல்மருவத்தூரில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனின் அருளால் சுப்பிரமணியாக பிறந்து பங்காரு அடிகளாராக மாறியவருக்கே இப்புகழ் சென்றடையும்.
இவ்வாறாக பல சாதனைகளை செய்த பங்காரு அடிகளார் நேற்று மாரடைப்பால் செங்கல்பட்டில் உயிரிழந்தார். ஆன்மீகவாதியான பங்காரு அடிகளாரின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களும், ஆன்மீக தலைவர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது X பக்கத்தில், 'பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்களை தெரிவித்து கொள்வதாக' குறிப்பிட்டு இருந்தார்.
இவரைத்தொடர்ந்து, அமித்ஷா தனது X பக்கத்தில், 'மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். 'அம்மா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத ஈடுபாடும் என்றென்றும் நினைவுகூரப்படும். துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தரட்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.