செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழ்வாசல் பகுதியைச் சேர்ந்த தீப்பாஞ்சியான் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதனை பாகப்பிரிவினையாக ஆளுக்கு 1.5 ஏக்கர் என நிலத்தைப் பிாித்துக்கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும் அதில் இருவருக்கும் சொந்தமாக ஒரு விவசாயக் கிணறும் பொதுவில் இருந்துள்ளது.
இதனிடையே சுப்பிரமணி தனக்கு அருகிலிருந்த 50 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த 50 சென்ட் நிலத்திற்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சக் கூடாது என அவரது அண்ணன் தீப்பாஞ்சியான் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை சுப்பிரமணி வழக்கம்போல் வயல்வெளிக்கு பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற அவரது அண்ணன் மற்றும் அண்ணி சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின் வீடு திரும்பியுள்ளனர். நடந்த சம்பவத்தை தீப்பாஞ்சியான், தனது மகன் குமரகுருவிடம் தெரிவித்துள்ளார். தனது தாய், தந்தையை அவதூறாகப் பேசிய சித்தப்பாவைப் பழி வாங்க குமரகுரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இன்று அதிகாலையே வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மோட்டார் அறையில் உறங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணியின் தலையில் கல்லைப்போட்டு குமரகுரு கொலை செய்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணியின் உடலை மறைப்பதற்காக, யாருக்கும் தெரியாமல் மோகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு, எதுவும் தெரியாதது போல் குமரகுரு வீடு திரும்பியுள்ளார்.