தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏன் இரட்டைமலை சீனிவாசன் கொண்டாடப்படவேண்டியவர்? - பிறந்தநாள் தின சிறப்புப்பகிர்வு! - பறையர் மகாஜன சபை

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், அவர் கொண்டாடப்படவேண்டியதின் காரணத்தை விளக்குகிறது, இந்த தொகுப்பு...

இரட்டைமலை சீனிவாசன்
rettaimalai sreenivasan

By

Published : Jul 7, 2023, 6:02 PM IST

செங்கல்பட்டு: ஆதிதிராவிட மக்களுக்காக பல்வேறு இயக்கங்கள் பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் போராடி வந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் முன்னுதாரணமாய் இருந்தவர், தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன்.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் அருகே உள்ள கோழியாளும் என்ற ஊரில் 07.07.1859ல் பிறந்தவர், சீனிவாசன். இவரது தந்தையின் பெயர் இரட்டைமலை. தந்தையின் பெயரை இவர் பெயரோடு முழுதாகப் பதிவு செய்ததால் இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். வறுமை காரணமாக கல்வியை பள்ளிப்படிப்போடு முடித்துக் கொண்டவர் இவர். அந்த காலகட்டத்தில் அதிதீவிரமாக இருந்த தீண்டாமை கொடுமையை எப்படி ஒழிப்பது என்பது பற்றியே இவரது சிந்தனை முழுவதும் இருந்தது.

இதற்காக ''பறையர் மகாஜன சபை'' என்ற அமைப்பை தோற்றுவித்து, ''பறையன்'' என்ற இதழையும் நடத்தி வந்தார். வேலைத்தேடி 1900ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இவர் 1921ல் இந்தியா திரும்பி வந்தார். 1923ல் சென்னை மாகாண சட்ட சபையில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 1920 முதல் 1936 வரை சட்டசபைத் தேர்தலில் எந்த ஆதிதிராவிடரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியமனம் மூலம் மட்டுமே பதவி ஏற்றனர்.

1924-ல் இவர் முன்மொழிந்த தீர்மானம் ஒன்று அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. எந்த ஒரு நபராய் இருந்தாலும் அல்லது நபர்களாய் இருந்தாலும் எந்த ஒரு ஊரிலும் எந்த ஒரு தெருவிலும் பொது வழியிலும் நடந்து செல்ல உரிமை உண்டு. யாரும் ஆட்சேபிக்க முடியாது.

இந்நாட்டிலுள்ள சாதி இந்துக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் ஆதிதிராவிடர்களுக்கும் உண்டு. அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சாதி இந்துக்கள் எப்படி செல்கின்றனரோ, அதேபோல் ஆதிதிராவிடர்களும் செல்லலாம்.

சீனிவாசனின் இந்த தீர்மானம் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1925இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆதிதிராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 1928ல் சென்னையில் நடந்தபோது அதற்கு தலைமை ஏற்றவர், இரட்டைமலை சீனிவாசன். இந்த மாநாட்டில் தான் 21 வயது நிறைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும்; ஆதி திராவிடர்களுக்கு என தனித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும்; கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லண்டனில் நடந்த புகழ்பெற்ற வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் உடன், ஆதி திராவிட மக்களுக்கான பிரதிநிதியாக இரட்டைமலை சீனிவாசன் கலந்துகொண்டார். இந்த வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் உருவாக்கித் தந்த ஆவணம் ஆதி திராவிடர்களுக்கான முழு உரிமையையும் பெற்றுத் தருவதாக இருந்தது.

அம்பேத்கரோடு நல்ல இணக்கம் கொண்டிருந்தாலும் கடைசி வரையில் இவர் புத்த மதத்தை தழுவவில்லை. இவருடைய அரசியல் மற்றும் சமுதாயப் பணியைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராகு ஷாகித் திவான் பகதூர் ராவ் பகதூர் போன்ற பட்டங்களை அளித்தது. இவரைப் பாராட்டி திரு. வி. க., இவருக்கு திராவிட மணி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். 1945 செப்டம்பர் 18 இரட்டைமலை சீனிவாசன் அமரர் ஆனார். இரட்டைமலை சீனிவாசனை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 15.08.2000 அன்று இவருக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

இதையும் படிங்க:MS Dhoni turns 42: கிரிக்கெட் உலகின் 'மாமன்னன்' தோனி - கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்ப்போமா!

ABOUT THE AUTHOR

...view details