செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 25 அடி ஆழம் உடையது எனக் கூறப்பட்டாலும், தற்போதைய ஆழம் 10 அடி கூட இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒவ்வோரு மழைக்காலத்திலும் அடித்து வரப்படும் மணலால் இந்த ஏரியின் ஆழம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதே எதார்த்தம்.
தூர்வாரப்படுமா மதுராந்தகம் ஏரி? - Request to provide madurantakam lake
செங்கல்பட்டு: 23 அடி ஆழமுடைய மதுராந்தகம் ஏரியை விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏரியை துார் வாரக்கோரி, விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து காேரிக்கை விடுத்தும், அது செவிடன் காதில் ஊதிய சங்கானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். போதாக்குறைக்கு அண்மையில் மாேச்சேரிக்கு அருகே, ஏரியின் பல ஏக்கர் பரப்பு தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
இந்த ஏரி தற்காலிகமாக நிரம்பியது போலக் காட்சியளித்தாலும், சில மாதங்களில் தண்ணீர் வற்றி விடும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும், மழை வரும்போது ஏரியில் வரும் தண்ணீரை பார்த்து மகிழ்வதும், சில மாதங்களில் வருத்தப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.
இந்த முறையாவது மதுராந்தகம் ஏரியை அரசு துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.