100 ரூபாயைத் தாண்டி அனைத்து தரப்பினரையும் எரிச்சலடைய வைத்தது பெட்ரோல், டீசல் விலை. விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகள் மாற்றி மாற்றி குற்றம்சாட்டிக்கொண்டதோடு, சாமானிய மக்களுக்குப் புரியாத புள்ளி விவரங்களை இரு தரப்பினரும் அள்ளித்தெளித்து வந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகைப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றின் விலை கண்ணுக்குத் தெரியாமல் உயர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுபொதுமக்களை சற்றே ஆசுவாசப்படுத்தியது என்றாலும், இந்த விலைக் குறைப்பு போதாது என்றே அனைவரும் கருதுகின்றனர். இதனிடையே தமிழ்நாடு நிதி அமைச்சர் பி. டி .ஆர். தியாகராஜன், பல ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தி வந்த விலையில் தற்போது 50 விழுக்காடு மட்டுமே குறைத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பைக் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் 'இதனால் மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும்' என்று கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன், 'அடிப்படை எக்சைஸ் வரி ( Basic Excise Duty)மட்டுமே மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சிறப்புக் கூடுதல் எக்சைஸ் வரி( Special Additional Excise Duty,SAED) சாலை மற்றும் உள்கட்டமைப்புக்கான செஸ் வரி( Road and Infrastructure Chess, RIC) விவசாயம் சார்ந்த மேம்பாடு மற்றும் உள் கட்டமைப்புக்கான செஸ் வரி( Agriculture and Infrastructure Development Chess, AIDC) போன்றவை முற்றிலும் மத்திய அரசின் சார்பாக வசூலிக்கப்படுவது.
தற்போதைய விலைக் குறைப்பு என்பது, சாலை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புக்கான செஸ் வரியிலிருந்துதான் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வரி வருவாயில், அதாவது அடிப்படை எக்ஸைஸ் வரியிலிருந்து மாநில அரசுக்கு அளிக்கப்படும் பங்கீட்டுத் தொகையில் எந்தவிதமான குறைவும் இருக்காது' என்று விளக்கம் அளித்தார்.