செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பச்சையம்மன் கோயில், ஏழாவது வார்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்தப் பகுதிக்கு அருகே, பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம், குப்பைகளைக் கொளுத்துவதால் ஏற்படும் புகைமூட்டம், கொசுக்கள் என பலவித சிரமங்கள் இக்குடியிருப்புவாசிகளுக்கு தொடர்ந்து ஏற்பட்டு ஏராளமான தொல்லைக்குள்ளாகி வந்தனர்.
மேலும், நகராட்சி வாகனங்கள் சாலையிலேய குப்பைக் கழிவுகளைக் கொட்டிச் செல்வதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று அப்பகுதியில் குப்பை கொட்ட வந்த நகராட்சி வாகனத்தை ஏராளமான பெண்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு நகரப் காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, இனி குப்பைகளைக் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியும் நடைபெற்றதால் முற்றுகையைக் கைவிட்டு அப்பகுதி பெண்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: நில் கவனி செல்லாதே...செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒளிராத போக்குவரத்து சிக்னல்கள்!