செங்கல்பட்டு:தாழம்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்தவர் கௌதமன்(59). செக்யூரிட்டி பிரான்ச் பிரிவில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய இவர், அண்மையில், நீதிபதி ஒருவருக்குத் தனிப் பாதுகாவலராக இருந்துவந்தார்.
வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று(அக்.5) காலை தனது வீட்டிலேயே துப்பாக்கியால், தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த தாழம்பூர் காவல்துறையினர், கௌதமனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர் வீட்டிலிருந்து துப்பாக்கி, குண்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
பணிச்சுமை காரணமாக மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கௌதமனுக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில், இருந்த இளம் காவலர் தற்கொலை செய்துகொண்டதும், காவலர்கள் இதுபோன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகியுள்ளது.
தற்கொலை தீர்வல்ல...!
தற்கொலை எண்ணம் தோன்றினால் மேற்கூறிய எண்ணை அழையுங்கள் எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிடவும் அரசும் சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்துள்ளன.”
உதவிக்கு அழையுங்கள்:
அரசு உதவி மையம் எண் - 104 சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம்- +91 44 2464 0050, +91 44 2464 0060
இதையும் படிங்க:நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு