செங்கல்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தணிகா என்ற தணிகாசலம். இவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் தணிகாசலத்தை A+ ரவுடி பிரிவில் போலீசார் வகைப்படுத்தி வைத்திருந்தனர். அதேநேரம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகாசலத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த தணிகாசலத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, செங்கல்பட்டு தனிப்படை போலீசார், சென்னையில் பதுங்கி இருந்த தணிகாசலத்தை நேற்று (அக்.11) இரவு கைது செய்து சித்தாமூர் காவல் நிலையம் அழைத்து வந்து கொண்டிருந்துள்ளனர்.