செங்கல்பட்டு:சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (47). இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 1-ஆம் தேதி தனது கடைக்கு வந்த பத்து வயது சிறுமியை ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் ரகுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரகு, கடந்த 4 நாட்களாக மனச்சோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று(மே 5) இரவு உணவு அருந்துவதற்காகச் சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் உணவுக் கூடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால் ரகு உணவு அருந்தச் செல்லாமல் தவிர்த்துள்ளார்.
சிறிது நேரத்தில், சிறையில் உள்ள கழிவறையில் தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்ட சிறைக் காவலர்கள் அவரை உடனடியாக மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ரகுவுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Tasmac: டாஸ்மாக் பாரில் அடிதடி.. தடுக்கச் சென்ற போலீசுக்கு மிரட்டல்!