செங்கல்பட்டு:தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகையின்போது, இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கீழே தள்ளி விடப்பட்ட முகமது ரியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பெரிய மசூதியில் இன்று (ஏப்.22) ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பின்னர் ரம்ஜான் நோன்பு குழுவினர், மசூதியின் நிர்வாகிகள் ஆகியோர் ரம்ஜான் பண்டிகைக்கான செலவுகள் குறித்த கணக்கு வழக்குகளைப் பார்த்து வந்துள்ளனர். அப்போது, அங்கு பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் அளிப்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது, முகமது ரியாஸுக்கும் மசூதி நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சிறப்பு தொழுகை நடைபெற்று வரும் இடத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனை மசூதியின் உறுப்பினரான முகமது ரியாஸ் "ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? தொழுகையை முடித்து வெளியே வந்ததும் பணம் கேளுங்கள்.." என கூறியுள்ளார்.
இதனைக் கண்ட, மசூதியின் விழா கமிட்டி செயலாளர் பாஷா என்ற அதிகூர் ரகுமான் ரியாஸை தட்டி கேட்டுள்ளார். அப்போது முகமது ரியாஸுக்கும் பாட்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ரியாஸை, பாஷா கீழே தள்ளியுள்ளார். இதனால், கண் மற்றும் நெற்றியில் பலத்த காயமடைந்த ரியாஸ் மயக்கநிலைக்குச் சென்றார்.